×

சோழவந்தான் அருகே பள்ளி வளாகத்தில் ஆபத்தான கிணறு: பெற்றோர் அச்சம்; கலெக்டர் கவனிப்பாரா?

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பள்ளி வளாகத்தில் உள்ள ஆபத்தான கிணறு மற்றும் இடிந்த நிலையில் உள்ள கட்டிடத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் இரண்டு ஆசிரியைகளிடம் 40 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளிக்குரிய சமையலறை பழுதடைந்த பல மாதங்கள் ஆகியும் சரி செய்யாமல் அதில் தான் சமையல் நடைபெற்று வருகிறது. மேலும் இதே பள்ளி வளாகத்தில் 20 குழந்தைகள் பயிலும் அங்கன்வாடியும் உள்ளது. அங்கன்வாடியின் ஒரு பகுதி அறை முற்றிலும் இடிந்து விழுந்து பல மாதங்களாக அபாய நிலையில் உள்ளது. தற்காலிகமாக அதை பூட்டி வைத்தாலும் குழந்தைகள் அச்சத்தில் தான் உள்ளனர். முக்கியமாக, இக்கட்டிடத்தின் பின் பகுதியில் பயனற்ற கிணறு இரும்பு வலை வைத்துக் கூட மூடப்படாமல் இருக்கிறது. குழந்தைகள் பயிலும் இடத்தில் உள்ள ஆபத்தான கிணறு குழந்தைகளையும், பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில்,‘‘பல மாதங்களாக அவ்வப்போது அதிகாரிகள் வந்து இக்குறையை சரி செய்வதாக கூறி சமாளித்து சென்று விடுகின்றனர். தற்போதைய சூழலில் பலர் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இங்கு அரசுப்பள்ளி, அங்கன்வாடியில் 60 குழந்தைகள் பயிலும் இடத்தில் இவ்வளவு குறைபாடுகள் இருப்பதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும் தென்கரை சமுதாயக்கூடம் அருகில் உள்ள மற்றொரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்குரிய கழிவறை இல்லை. சுற்றுச்சுவர் இருந்தும் கதவுகள் இல்லாததால் ‘குடிமகன்கள்’ குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கன்வாடி முன்பு வீசி விட்டு செல்கின்றனர். இதனருகே பழுதடைந்த பயன்பாடற்ற கால்நடை மருத்துவமனை கட்டிட மும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : school premises ,well ,parents ,Cholavandan ,Collector , Cholavandan, School, Dangerous Well, Collector
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது